பிடிக்கும்


பிடித்ததற்க்கான
காரணம் கேட்கிறீர்கள்!
ஒரு மழைநாளில்
ஒதுங்கிய மாடிப்படியின்
அருகில் என்னைப் பார்த்ததும்
உதாசீனப்படுத்தி
பறக்கமால் இருந்த
காரணத்தால் அதை
அதிகம் பிடிக்கும்.


கவிநிலா


அண்ணன் மகளின்
புகைப்படத்தை அனுப்பியிருந்தார்
அவளின் முகத்தை முதலாய்
பார்க்கும் படம் - எனக்காக
போனால் போகட்டுமென்று
பூ நகையையும் வீசியெறிந்திருந்தாள்.
அப்புன்னகை
அங்கேயேதான் இருக்கிறது
தேவதைகளின் புன்னகையை
சேகரிப்பவனின் நினைவுகளின்
அறையில்.
அனுமதி தேவையில்லை
தேவதைகளை கண்டால்
உடனே அனுப்பி வையுங்கள்
அவர்களிடம் புதிதாய் காட்ட
என்னிடம் ஒன்று இருக்கிறது.
யுகங்கள் காண காத்திருந்த
பூவின் புன்னகையும்
அதை வரமாய் வாங்கி வந்திருக்கும்
புகைப்படமும்!


இருளும் சமாதானமும்


தீர்த்துவிடும் முனைப்பில்
கொட்டும் கனமழையின்
நள்ளிரவில் 
சரியாக கட்டைவாருடன்
இடையன் அமர்ந்திருந்த
இடத்தை கடக்கும்போது
மழையின்
 குரூரம்
நகரவிடமால்
 மிரட்டுகிறது.
தூரத்தில்
 கரியமேடாய்
காட்சியளிக்கும்
 எரிமலையின்
காத்திருப்பைபோல
இப்போது
 நானும்.
மாலையில்
என்னை
 அலட்சியப்படுத்தாமல்
மேய்ந்து
 கொண்டிருந்த
ஆடுகள்
 நின்ற பக்கம்
இருளில்
 வலுவாய் அசைகிறது.
அது
 வழிதவறிய ஆடுகளில்
ஒன்றாய்
 இருக்குமென்று
நான்
 சமாதானமடைகிறேன்.
இடையனின்
 கணக்குப் பற்றி
ஒன்றும்
 அபிப்பிராயமில்லை.
இப்போது
 இன்னும் அருகில்.
எனக்குள்
 நடந்த
சமாதான
 பேச்சுவார்த்தை
தோல்வியடைகிறது.
இரு குருவிகள் வாழும் வீடு


பன்னெடுங்காலமாக அந்த வீடும்
இரு குருவிகளும் இருக்கின்றன
இப்பொழுது நானும்.
வளைந்து செல்லும் மாடிப்படியின்
இரண்டாவது வளைவில்
இப்பிரபஞ்சத்தையே அலைந்து
கட்டிய குருவிகளின் வீடு.
மூன்றாவது அடுக்கின்
கடைசிப்படியில் மூச்சுவாங்கி
முகம்பார்க்கும் வாக்கில்
சூன்யமான அறைகளை கொண்ட
நான் வாழும் வீடு.
நாங்கள் இரவுகளில் சந்தித்து
காலையில் பிரிந்து செல்கிறோம்.
அறைகளை பூட்டியபின்
நான் கையிலெடுத்துச் செல்லும்
சாவிகளைப் பார்த்து பதட்டமடைகின்றன.
சிரித்திருக்கவும் வாய்ப்புண்டு.
இன்று இரவு அவை இரண்டும்
இன்னும் வீடு திரும்பவில்லை
எனக்கு பதட்டமாய் இருக்கிறது.
இப்போது குருவிகள் இல்லாத அவ்வீடு
நான் வாழும் வீட்டைப்போலவே
சூன்யமாயிருக்கிறது.


ஓலம்


பேரிரைச்சலுடன் பெய்த 
அப்பெருமழை அதிர்ச்சியாயிருந்தது.
அந்த ஒலம் என்னை
அலக்கழித்துக் கொண்டேயிருந்தது.
நீண்ட நேரம் கழித்து
நான் தூங்கிப் போனேன். 
விழுந்த மழைத்துளி அதன்
பயணத்தை துவங்கியிருந்தது


என் சாவுக்கு யாரும் காரணமில்லை


நேற்றிரவு என் அறையில்
யாரோ ஒருவர் அழுதுகொண்டிருந்தார்
ஆறுதல் சொல்லலாமென்று எத்தனித்தேன்
உன்னிடமிருந்து ஆறுதல் தேவையில்லை
என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்
என் சொந்தங்களிடம் விசயத்தை
சொல்லி அழைத்து வருவதற்குள்
"என் சாவுக்கு யாரும் காரணமில்லை"-யென்று
கடிதமெழுதி வைத்துவிட்டு
தூக்கில் கேள்வியாய் தொங்கி கொண்டிருந்தார்.
திடுக்கிட்டு எழுந்ததில்
அக்கொடுங்கனவு கலைந்தது.
எப்போதும் போல அவர் சாவுக்கு
நான் காரணமாய் இருக்க முடியாது
என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு 
மீண்டும் தூங்கிப்போனேன். 
இப்போது என் கொல்லைப்புறத்தில்
மூன்றுபேர் தற்கொலை செய்துகொள்ள யாரோ
கைகளை பின்னால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


ஆறுதல்என்னைச் சுற்றி
பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்கிறது
இவ்வுலகம்
இயல்பான மனம்
கொண்டயெனக்கு
பதட்டமாயிருக்கிறது.
எங்கோ தொலைந்துவிட்ட
குழந்தைபோல்
அழத்துடிக்கிறேன்
ஆறுதலுக்கோர் வார்த்தையில்லை
என்றுணர்ந்து
எதையோதேடி
கூட்டத்தோடு கூட்டமாய்
நானும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடம் எதாவது
வார்த்தை மிச்சமிருந்தால்
சொல்லுங்கள்
கொஞ்சம்
இளைப்பாறிக்கொள்கிறேன்.


தனிமையாரோ
யாரோயோதான்
தேடிக்கொண்டு வருகிறார்
இருந்துவிட்டு
போகட்டுமே
அவ்வழைப்பை
எனக்கானதாய்
நினைத்துக் கொள்கிறேன்.
இக்கொடுந்தனிமைக்கு
ஆறுதலாய்
இருந்துவிட்டு போகட்டும்! 


நீண்ட நாள் கழித்து

நீண்ட நாள் கழித்து
ஏழுகடல்
நூறு மலை தாண்டி
வந்திருந்தாள் எனைக்காண!
வெண்படல விழிசுருங்க
உதட்டில் ஒரு சுழியெடுத்து
முறைத்து - நொடியெடுத்து
சிரித்தாள் ஏதேதோ கதைத்தாள்.
நானோ அவள் முகத்தையே பார்த்திருந்தேன்
முற்றாய் உதட்டசைவிலே லயித்திருந்தேன்.
கள்ளிமுகம் சற்றும் மாறவில்லை
கண்டிப்புகள் சற்றும் குறையவில்லை.
நெடுங்காலமாய் அவளைத்தவிர
காட்சிகளை மட்டும்தான் 
மாற்றிக்கொண்டிருக்கிறேன் அல்லது 
மாறிக்கொண்டிருக்கின்றன கனவில்.
நல்ல தூக்கம் போலிருக்கிறது
நீண்ட நாள் கழித்து.