என் சாவுக்கு யாரும் காரணமில்லை


நேற்றிரவு என் அறையில்
யாரோ ஒருவர் அழுதுகொண்டிருந்தார்
ஆறுதல் சொல்லலாமென்று எத்தனித்தேன்
உன்னிடமிருந்து ஆறுதல் தேவையில்லை
என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்
என் சொந்தங்களிடம் விசயத்தை
சொல்லி அழைத்து வருவதற்குள்
"என் சாவுக்கு யாரும் காரணமில்லை"-யென்று
கடிதமெழுதி வைத்துவிட்டு
தூக்கில் கேள்வியாய் தொங்கி கொண்டிருந்தார்.
திடுக்கிட்டு எழுந்ததில்
அக்கொடுங்கனவு கலைந்தது.
எப்போதும் போல அவர் சாவுக்கு
நான் காரணமாய் இருக்க முடியாது
என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு 
மீண்டும் தூங்கிப்போனேன். 
இப்போது என் கொல்லைப்புறத்தில்
மூன்றுபேர் தற்கொலை செய்துகொள்ள யாரோ
கைகளை பின்னால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


0 Comments:

Post a Comment