இரு குருவிகள் வாழும் வீடு


பன்னெடுங்காலமாக அந்த வீடும்
இரு குருவிகளும் இருக்கின்றன
இப்பொழுது நானும்.
வளைந்து செல்லும் மாடிப்படியின்
இரண்டாவது வளைவில்
இப்பிரபஞ்சத்தையே அலைந்து
கட்டிய குருவிகளின் வீடு.
மூன்றாவது அடுக்கின்
கடைசிப்படியில் மூச்சுவாங்கி
முகம்பார்க்கும் வாக்கில்
சூன்யமான அறைகளை கொண்ட
நான் வாழும் வீடு.
நாங்கள் இரவுகளில் சந்தித்து
காலையில் பிரிந்து செல்கிறோம்.
அறைகளை பூட்டியபின்
நான் கையிலெடுத்துச் செல்லும்
சாவிகளைப் பார்த்து பதட்டமடைகின்றன.
சிரித்திருக்கவும் வாய்ப்புண்டு.
இன்று இரவு அவை இரண்டும்
இன்னும் வீடு திரும்பவில்லை
எனக்கு பதட்டமாய் இருக்கிறது.
இப்போது குருவிகள் இல்லாத அவ்வீடு
நான் வாழும் வீட்டைப்போலவே
சூன்யமாயிருக்கிறது.


0 Comments:

Post a Comment