நான் நாத்திகன் ஏன்? - பகுத்தறிவாளன் பகத்சிங்


பகத்சிங் ஒரு மாவீரன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த பகுத்தறிவாளன் என்பதை பகத்சிங் சிறை வாசத்தின் போது எழுதி தந்தையிடம் அனுப்பி வைத்த பகுத்தறிவு சிந்தனைகளை தமிழில் ப.ஜீவானந்தம் என்பவர் மொழிபெயர்த்த 'நான் நாத்திகன் ஏன்? என்ற புத்தகத்தை படிக்கும் பொது உணரமுடியும்.

இன்று கூட கடவுள் மறுப்புக் கொள்கைகளை பேசுபவர்களை அகங்காரம் பிடித்தவன். தற்பெருமைக்காக நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். இதை உணர்ந்த பகத்சிங் கடவுளை மறுக்கும் காரணங்களை விவாதிக்கும் முன்னர் தனக்கு அகங்காரமோ, தற்பெருமையோ இல்லை என்கிற நிலையை அழகாய் விளக்குகிறார்.

"என்னுடய பாட்டனார் தீவிரமான ஆத்திகவாதி. என்னுடைய தந்தை சுதந்திர கருத்துக்களை தீவிரமாக பேசினாலும் கடவுளை முழுதாய் நம்புபவர். எனக்கும் மதம்,சம்ப்ரதாயங்கள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுள் ஒருவர் இருப்பதை நம்பினேன்.

இப்படி ஒரு ஆத்திகவாதி அகங்காரம் காரணமாக கடவுள் நம்பிக்கையை விட முடியுமா?

அப்படி மறுத்தால் அதற்க்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

1. கடவுளை பரம விரோதியாய் எண்ண வேண்டும். இல்லையென்றால்

2 தானே கடவுள் என்று எண்ண வேண்டும்.

இந்த இரு கருத்துக்களையும் உடையவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது.முதலாவது கடவுளை விரோதியாய் பார்ப்பவன் கடவுள் ஒருவன் இருபதாய் நம்புகிறான். இரண்டாவது - தான் கடவுள் என்று சொல்லுவதால் மனிதர்களை மீறிய ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குவதாக நம்ப வேண்டும். ஆதலால் இவர்கள் இருவருமே நாத்திகர்கள் இல்லை.

நான் இவர்கள் இருவரையும் சார்ந்தவன் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதையே அடியோடு மறுப்பவன்.

மறுப்பதற்கு காரணம்?:

"நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்த பொழுது, இயக்கத்தில் இருந்த பலர் நாத்திக கருத்துக்களை உடையவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஆயுள் கைதியாய் சிறைவாசம் இருந்த பொழுது ஜெபிக்க எழுந்த ஆர்வத்தை அவர்களால் அடக்க முடியவில்லை. இயக்கத்தின் முழுப்பொறுப்பும் என்னிடம். அதுவரை வெறும் புரட்சிக்காரனாய் இருந்த நான் மார்க்கசின் பொதுவுடைமை நூல்களை கற்றேன். ஏகாதிபத்திய இருளை நீக்கிய லெனின்,ட்ராஸ்கி ஆகியோரின் நூல்கள்ளையும் கற்றேன். குறிப்பாக அராஜக தலைவன் பக்குனின் "கடவுளம் ராஜ்யமும்" நூலையும் , நிர்லம்ப் சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு நூலையும் கற்றதில் கடவுள் இல்லை என்பதில் தெளிவு கொண்டேன். "ஆராய்ச்சித்திறனும் சுயமாக யோசிக்கும் திறனும் புரட்சியாளனின் இரு கண்கள்"- என்கிறார் பகத்சிங்.

கடவுள் உருவான விதம் பகத்சிங் பார்வையில் -

"உலகம் ஏன், எங்கிருந்து உருவானது? உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிக்கான காரணம் என பல கேள்விகளுக்கு முன்னோர்கள் காரணம் கண்டுபிடிக்க முற்படும்போது சரியான தெளிவு கிடைக்காதால் கடவுள் என்று உருவாக்கப்பட்டு வேதாந்த தத்துவங்கள் உருவாகபட்டன. இது முன்னோர் ஓவ்வொருவரின் சொந்த கருத்துக்கள் என்பதால்தான் மதத்துக்கு மதம் கருத்தக்களில் பல முரண்பாடுகள் இருக்கிறது."

ஆத்திகவாதிகளிடம் பல கேள்விகளை எறிகிறார் பகத்சிங்.

ஆத்திகவாதிகளே,

நீங்கள் நம்புவதுபோல் சர்வவல்லமை படைத்த கடவுள்தான் இந்த உலகை படைத்தார் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களும், கஷ்டங்களும் நிறைந்த உலகை படைத்தார்? பூரணமாக திருப்தி அடைந்த ஜீவன் ஒன்று கூட இல்லையே ஏன்?

இதை நீங்கள் கடவுள் சித்தம்- ஈசன் இட்ட கட்டளை என்றால் "சட்டத்துக்குள் அடங்குபவன் சர்வசக்தி படைத்தவன் அல்லன்? அவனும் அடிமையாகதனே இருக்க முடியும்?

இதை நீங்கள் கடவுளின் பொழுதுபோக்கு,திருவிளையாடல் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள். பொழுதுபோக்குக்காக ரோமாபுரியை எரித்து மக்களை துன்பங்களுக்கு ஆளாக்கிய நீரோவுக்கு இவ்வுலகம் சூட்டிய பெயர் கொடுங்கோலன், கேடுகெட்டவன். அப்படியானால் உங்கள் கடவுள் கொடுங்கோலனா?

இறந்த பிறகு மோட்சத்தை அடைய இப்பொழுது உங்கள் கடவுள் பரிசோதிக்கிறாரா? பிற்பாடு மிருதுவான பஞ்சால் காயத்தை ஆறவைக்க இப்பொழுது காயத்தை ஏற்படுத்துகிறேன் என்ற வாதத்தை ஒத்துகொள்வீர்களா?

முஸ்லிம்,கிறிஸ்துவர்களை நோக்கியும் கேள்வி கேட்கிறார்,

முகமதியர்களே-கிறிஸ்துவர்களே,

உங்களுக்கு முற்பிறப்பு-பூர்வ ஜென்மம் பற்றி நம்பிக்கை இல்லை. சர்வ வல்லமை படைத்த உங்கள் கடவுள் இந்த உலகத்தை படைக்க ஏழுநாட்கள் எடுத்துகொண்டது ஏன்? தினமும் நன்றாய் இருக்கிறது என்று ஏன் கூறினான்?

இன்று அவனை கூப்பிடுங்கள். "எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்லும் தைரியம் இருகிறதா பாப்போம்"?

தண்டனை மூன்று வகை "பழிக்குப்பழி,பயங்காட்டுதல்,சீர்திருத்துதல்"
இந்த மூன்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சீர்திருத்துதலையே முன்வைகின்றனர்.

அப்படியிருக்க முன்ஜென்ம வினைக்காக மக்களை துன்பபடுதுதல் சரியா?

தண்டனையாக மாடாக,பூனையாக,நாயாக 84 லட்சம் இருபதாக சொல்கிறீர்கள். இதனால் அடையும் சீர்திருத்தம் எனன? முன்ஜென்ம ஞாபகம் கொண்டவர்கள் யாரேனும் உண்டா?

தனது பொழுதுபோக்கிற்காக மக்களை கொன்று குவிக்கும் செங்கிஸ்கான் போல்தான் கடவுள் என்றால் வீழ்த்துங்கள் அவனை!" என்று கர்ஜிக்கிரான் இந்த சிங்கம்.

சரி உலகத்தை படைத்தவன் கடவுள் இல்லை? மனிதனை படைத்தவன் கடவுள் இல்லை?பிறகு யார்தான் இதற்கெல்லாம் மூலம் என்கிற கேள்வி எழும். இதற்க்கு பதில் பகத்சிங் நடையில்,

"இந்த விசயத்தில் தெளிவு கொள்வதற்கு சார்லஸ் டார்வின் எழுதிய "orgin of species " நூலை படியுங்கள். பல்வேறுபட்ட பொருட்கள் தற்செயலாக கலந்து உருவானதில் பிறந்தது இவ்வுலகம். பூர்வ ஜென்ம பலன் ஏதும் இல்லை - அதற்கு நம் ஜீன் தான் காரணம் என்று வல்லுனர்கள் சொல்லிவிட்டனர்.

கடவுள் ஒன்று இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்?

பதில்- சில பித்தலாட்டக்காரர்கள் மக்களை அடிமையாகி வைத்துகொள்ள கடவுளை உருவாகி பிரசாரம் செய்தனர். மக்கள் எப்படி பேய்,பிசாசு என்பதை நம்பினார்களோ அதே போல்தான் கடவுளையும் நம்பினார்கள். மனிதனுக்கும் தன்னுடைய கஷ்ட காலங்களில் தன உறவுகளையும் தாண்டி ஒன்றை நாட மனம் எத்தனித்தது. இது மிருக நிலையில் சரி. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறி பகுத்தறிவுடன் அதை உடைத்தெரியாமல் போனது துயரம்."

முடிவுரையாக, "கஷ்ட காலத்திலும் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரை பற்றி படித்திருக்கிறேன். நானும் என்னுடைய முடிவுரையில், தூக்கு மேடையில்கூட ஆண்மையுள்ள மனிதனை போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து வருகிறேன்". - என்று முடித்திருந்தான் அந்த பகுத்தறிவாளன்-நாத்திகன்-மாவீரன் பகத்சிங்.


0 Comments:

Post a Comment