சென்னைவாசி

ஊரை சுற்றும் வேலையெல்லாம் 
         கோணிப்பையில் மூட்டைகட்டி 
பரணியிலே போட்டு விட்டேன் !
 கூரையிலே ஏறி சென்று - கோழி 
       மறதியிலே விட்ட முட்டைகளை - எடுக்கும்
 உளவு வேலை விட்டு விட்டேன் !

 காலையிலே தினம் எழுந்து 
       கழனி சென்று கடன் கழிக்கும் - பழமையினை
   கனவிலும் கூட மறந்து விட்டேன் !
 ஊரில் உள்ள உறவுகளின் 
         பார் காண பாச மொழிகளை - சில
வார இறுதியில் மட்டும் வாசம் காண்டேன் !

தேர்பவனி ஒருபுறமும் 
           மகளிரணி மறுபுறமும் என 
ஊர் திருவிழாவின் உணர்வுகளை - சில படக்
         காட்சியோடு மட்டும் பகிர்ந்துகொண்டேன் !  
  பத்து பைசா இல்லாட்டாலும்
         பந்தாவாக திரிந்ததெல்லாம்
 கடைசியாக ஊர்குளத்தில் மூழ்கும் பொது
           அழுக்கோடு மறைய கண்டேன் !

காடு வழிக் கழனிகளில்
      ஆடும் பயிர்களின் அழகெல்லாம்
ஆழ்மனதோடு பதிய கண்டேன் ! - அங்கே
      உலாவும் பயிரின் வாசத்தோடு
   என் சுவாசத்தை பகிர்ந்து வந்தேன்  ! 
மயில் நின்றாடும் எழிலைவிட்டு 
     பயிர் நின்றாடும் வயலை விட்டு 
தினம் கொண்டாடும் நட்பை விட்டு 
     பணம் கண்டாடும் உறவை விட்டு 
 வசை பாடும் ஊரை விட்டு  - எனக்காக
        தசையாடும் உலகைவிட்டு 
 மனம் நின்றாடும் ஊரை விட்டு 
         பணம் கண்டாட படிக்க வந்தேன் !
 படிக்க வந்து  பட்டணம் கண்டேன் !
          பல நாள் வாழ்ந்த பின்பு
புரிந்து கொண்டேன்- நான்
        வாழ்ந்தது பட்டணத்தில் அல்ல !
                              - "படு ரணத்தில்" என்று !


                          *****
குடிக்க கூட தண்ணி இல்லை 
          இது பட்டணமாம் பட்டணம் !
 குடிக்க தண்ணி வாங்கி வாங்கி 
         நடுதர குடும்பம் கூட படுத்துரும் !
 ஊரில் நின்னுகிட்டு சோறு தின்ன 
       ஆத்தா வசை பாட கேட்கணும் !
 இங்கே நின்னுகிட்டு சோறுதிங்க 
         ஸ்டைல க்யுவில் போய் நிக்கணும் !
அன்றாட தேவைக்கே தினம் 
          அல்லல் பட்டு சாகிறேன் ! - அட
அன்னாடங்காட்சிகூட  ஊர்நாட்டில் 
          நல்ல தூக்கம் தூங்குறான் !  

பன்றிகளை பார்த்து பார்த்து 
            பசுமாடும் மறந்து போச்சு !
 பர்க்கர் பீசா மோகத்தினால் 
         பழையசோறும் மறைந்து போச்சு  !
 பார்க் பீச் போய் பார்த்த கூட்டம்
            ஆடு மாடு போல திரியுது!
 பசும் புல்லு திங்கும் மாடு எல்லாம் 
          செக்ஸ் போஸ்டர்கள  திங்குது !
வங்கி கணக்கு மட்டும் இல்லையின்ன 
         பலர் பொழப்பு இங்க நாறிடும் !
 எங்க அப்பன் ஆத்தா திட்டு எல்லாம் 
        ஏ  டி எம்-ல் பாஸ்வோர்ட மாறிடும் ! 

                             ****
தமிழன்
பிறக்கையிலே
நெத்தியில
ஒட்டிவச்சவாசகம் !-நீ
சென்னையில
கொஞ்ச நாள்
குப்ப கொட்டி ஆகனும்!

ஒட்டுமொத்த
ஜனத்தொகையில்
கால்பகுதி சென்னையில!
மத்ததெல்லாம்
கால் ஓஞ்சு கை ஒடிஞ்சு
ஓய்வுக்காக திண்ணையில !

எல்லோருமே
பூர்விகம் சென்னையா?'ன்னா
முழிப்பாங்க!!!
ஒருத்தன் தடுக்கி
கீழ விழ தூக்கி விட்ட
நம்ம ஊர்கட்டு பெற
சொல்லி சிரிப்பாங்கே!

மணிப்பூர்  ஜெய்பூர்ன்னு
பல மாநிலமும்
வாசிக்குது !
கண்டுபிடிக்க 
வேணுமுன்னா
ஆளை பார்க்க தேவையில்லை
காலை பார்த்து
நடந்தாலே 
கணகத்சிதமா தெரியுது!

ஒட்டுமொத்த
ஜனத்தொகையும்
பணத்தைத்தானே
நோக்குது !- ஊரில்
நல்ல ஆடி போகும்
பொணம் கூட
அமரர் ஊர்தியில
அஞ்சு பேரோட அடங்குது!
 எப்படியோ ...!!!!
மக்களெல்லாம்
ஒண்ணு சேர்ந்து
வாழுது! - நாட்டு
ஒற்றுமை காட்சிகூட
நம்ம ஏரியா
பஸ்ஸ்டாப்பில் தெரியுது!

                ***
சென்னையில் பெண்கள்!
மேற்கு
கலாச்சாரத்தின்
எச்சத்தின் மிச்சம்!
தாவணியை
மறந்த
லாராதாத்தாக்கள்!
ஜீன்ஸில்
ஜொலிக்கும்
சில்க்ஸ்மிதாக்கள்!
துப்பட்டாவின்
பணியை
மாற்றிய
புதுயோசனை
புத்திசாலிகள்!
கையை உறையிலும்
முகத்தை மறைவிலும்
வைத்துக்கொண்டு
உறுமி பைக்ஓட்டும்
பாரதியின் கனவு
குழந்தைகள்!

குரலில் மட்டுமே
தன்னை
அடையாளபடுத்தும்
நவீன
வார்ப்புகள்!
இங்கே ஆணுக்கு
பெண் சமம்! -அது
அரசு பஸ்ஸாக
இருந்தாலும் சரி!
அரசு பார் ஆக
இருந்தாலும் சரி!
வாரம்
தவறாமல்
பியுட்டி பார்லரில்
தலை சாய்க்கும்
அழகு தேவதைகள்!

பத்து பைசா
செலவில்லாமல்
ஊர் சுற்ற
காவலனை
கொண்டவர்கள்!
பாவம் காதலன்கள்!
என்னதான் 
நடை மாறி
உடை மாறி 
மொழிகூட மாறி 
மாடர்ன் கேள்ஸ் 
என்று மார்க் 
வாங்கினாலும் 
தன் பர்ஸை
காக்கும் பட்சத்தில்
அதே 
தமிழச்சிகள்!

          ***
ஆஹா ஐ.டி பார்க்!

இங்கே
படித்தவருக்கும்
பணத்துக்கும்
அதிக மவுசு!
படித்தவர்கள்
அடிமையாக!
பணம் மட்டுமே
உரிமையாக!

அடடே ஐ.டி.காரர்கள்!

அடிமை பத்திரம்
எழுதிக்
கொடுத்துவிட்டு 
ஆடம்பர 
வாழ்க்கை 
வாழ்பவர்கள்!

எந்நேரமும்
உழைக்கும்
மனித எந்திரங்கள்!
இருந்த 
இடத்திலிருந்தே 
இன்றைய 
உலகை இயக்குபவர்கள்!

சனி ,ஞாயிறு
சம்பளதேதி
நன்னாள் என
கொண்டவர்கள்!
அவனுக்கென்ன 
' ஐ.டி- ல இருக்கான்'
பெரும் பேர்
பெற்றவர்கள்!

இவர்களின்
எதிர்காலத்தை
தீர்மானிப்பது
இவர்கள் அல்ல!
பங்கு சந்தைகள்!

இவர்கள்
பண சந்தையில்
தள்ளப்பட்ட
பந்தய குதிரைகள்!
சொந்தங்களை
பிரிந்துவாழும்
புதுயுக
சிந்தனைவாதிகள்!


0 Comments:

Post a Comment