10 நிமிட தாமதம்

ஐந்து ருபாய் சில்லறைக்காக
நடத்துனரின் அர்ச்சனையோடு
அடுத்த ஸ்டாப்பில்
இறங்கி நிற்கிறேன்
கையில் காந்தி நோட்டோடு
காந்தி ரோட்டில்!

முகம் இறுகி கண்கள் சிவந்து
அடுத்த பஸ் பார்த்து நிற்க
பின்புறம் எதோ
பாவனையில் கை அசைய
திரும்பிப்பர்கிறேன் ! -

ஐந்து நொடியில்
ஐந்து வருடங்களை
மனம் அலசி பார்க்கிறது !
நினைவு குதிரையில்
யாரோ ஒருத்தி
பயணம் செய்கிறாள் !

ஒடிசலான உருவம்
ஒல்லியான கன்னம்
வெட்டி நடக்கும் நடை!
பிடிபட்டது பேதை
அவள்தான் இவள் !

உப்பிய கன்னம்
சற்றே பெருத்த உடல்
புடவையில் அவள்
புடவையின் நுனியை
பிடித்தவாறு அவள் மகள் !

அசட்டு சிரிப்புடன்
அவளை அடைகிறேன்!
சிறிய இடைவெளியில்
நலம் விசாரிப்புகள் !
அளந்த வார்த்தைகள்
வார்த்தையின் நடுநடுவே
செயற்கையாய் சிரிப்புகள்!

இங்கிதமறியா  பேருந்தொன்று
அவள் பயணத்தை நீட்டி சென்றது!

எனக்கான பேருந்தின்
பத்து  நிமிட இடைவெளி
பல வருட நினைவுகளை
வாரி இரைக்கிறது ! -

பேருந்து இரைச்சலில்
மன பிம்பங்கள் அகல
ஜன்னலோர இருக்கையில்
சாய்ந்து கிடக்கிறேன்-

மனதில் மாறி மாறி ஒலிக்கிறது!
அவளின் அன்றய குழந்தை சிரிப்பும்
இன்றைய அவள் குழந்தையின் சிரிப்பும்!


குழந்தைப் பாசம்


 பார்த்த நொடியில் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் குழந்தைகள். அதற்கு அவர்களின் குழந்தைத்தனம்குணம்விளையாட்டாய் செய்யும் செயல்கள்பேசும் மழலைக் குரல்சுத்தமான அன்புஎதையும் எதிர்பார்க்காத பாசம். குழந்தைகளை விட அவர்களிடம் குழந்தைதனமாய் விளையாடும் பெற்றோர்களின் செயல் பார்க்க மிக அழகாய் இருக்கும்.அந்த குழந்தை வளர்ந்து ஆளான பின்பும் அவர்களிடம் குழந்தை தனமாய் பேசும்- விளையாடும் பெற்றோர்களை பார்க்கும் பொது என் மனம் லயித்து கிடக்கும்.

 
சென்னை டு பாண்டி செல்லும் பேருந்தில் நான் அமர்ந்திருந்த எதிர் பக்கம் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர். முன் இருக்கையில் அப்பாவும் அம்மாவும்பின் இருக்கையில் அவர்களின் இருபது வயதை ஒத்த பெண் குழந்தைகள். அந்த அப்பா கையை பின்புறம் கட்டியவாறு இருக்கையின் மேல் வைத்திருந்தார். பின்னல் இருந்த அந்த பெண் குழந்தை அவரின் உள்ளங்கையில் கைவைபதும்அவர் கையை மூடி அந்த பெண்ணின் கையை பிடிக்க முயற்சியுமாய் அந்த சிறுபிள்ளை விளையாட்டு பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.

 
ஒரு தாயின் பாசம் அதையும் தாண்டி என்னை பிரமிக்க வைத்தது. நண்பனுக்காக டீ கடையில் காத்திருக்கிறேன்பக்கத்தில் ஒரு 40 வயதை தாண்டிய பெரியவர். அந்த வழியே கடந்து சென்ற 75 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி திரும்பி பார்த்ததும் மிகுந்த சந்தோசத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தார். என் பக்கத்தில் இருந்த அவர் வாம்மா எப்டி இருக்க என்று கேட்டு முடிக்க,அந்த அம்மா அவரின் தலையை கோதிக்கொண்டே " சாப்டியாப்பா ? ஏன் சவரம் பண்ணலபாருமுகம் சோகமா தெரியுதுஇந்தா நூறு ரூபா மூத்தவன் கொடுத்தான் வச்சுக்கோ கொழந்த - இளையவள் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்" - சொல்லிக்கொண்டே முகத்தை தடவி பார்த்துவிட்டு பாட்டி சென்றார். கொஞ்ச நேரம் கழித்து பக்கத்தில் இருந்தவரின் கண்ணில் துளியை பார்த்ததும் சற்று பிரமித்து போனேன். என்னே குழந்தை பாசம்!!!


கொல்லுதே மழைக்காலம்


வெயில கூட தாங்கிடலாம் .. ஆனா இந்த மழைக்காலத்துல அப்பப்பா.. ன்னு கிராமத்துல சலிச்சுக்கிற நிறைய பேர பாத்துருக்கேன், இதையெல்லாம் அவங்க சொல்றது அடைமழைக்காலத்துல. ஆனா சென்னையில சும்மா கால் மணிநேரம் தூறல் தூறினாலும் .. முடியலடா சாமி .. சென்னைக்கும் தண்ணிக்கும் ஆகாது போல.குடிக்கிற தண்ணிய இருந்தாலும் சரி , கொட்டுற மழையா இருந்தாலும் சரி . ரெண்டுமே கஷ்டம்.

 சென்னையில சாதாரண நாட்களிலே வாகன நெரிசல் பத்தி கேக்கவே வேண்டாம் . மழைக்காலத்தில் எறும்பு கூட்டம் போல் அல்லவே நகர்கிறது. எல்லாரும் சொல்லற மாதிரி குண்டும் குழியுமான சாலைஎன்பாதால் மழைநீர் நிரம்பும் காலங்களில் எது குண்டு எது குழி என்று தெரியாததால் வண்டியை வேகமாக நகர்த்த நமது ஓட்டுனர்கள் பயப்படுவது ஒரு காரணம். அடுத்த ஸ்டாப்பில் இறங்க அரைமணி நேரம் ஆகுதுன்ன பாத்துக்குங்க.

அப்புறம் நம்ம பாதசாரிகள் , பேருந்துல கஷ்டப்பட்டு கீழ இறங்கி நடக்கணும்ன்ன கையில் ஒரு ஊன்றுகோல் இல்ல எதாச்சும் படகு வேணும் கடக்க. சுற்றிலும் தண்ணீர் - தீவில் விடப்பட்டது போல காட்சி. எங்க கால் வச்ச எவன் வெட்டுன குழி இருக்குமோன்னு பயம். இதெயெல்லாம் மீறி நடந்து போன எதோ நேத்திகடன் மாதிரி சேறை வாரி உடம்பில் அடித்துவிட்டு செல்வார்கள் நம்ம ஓட்டுனர்கள்.

 இன்னும் எவ்வளவோ கஷ்டம் , மழை நீர் வடிய வடிகால் இல்லாதது எவ்ளோ கஷ்டம்,இருக்குற வடிகாலையும் சிலர் குப்பைதொட்டி ஆக்கினதால எவ்ளோ கஷ்டம்,குளிப்பான கடையில கைய குத்த வச்சு உக்கந்துருப்பவர் - 500 இளநீர்களை சாலையோரம் போட்டுவிட்டு விரக்தியான முகத்துடன் குடையை பிடித்து கொண்டிருக்கும் பெண், சாலை ஓரமே வீடாய் நினைத்து அங்கேயே சமைத்து அங்கே உறங்கும் மக்கள் என இங்கு வாழும் அனைவருக்கும் எவ்வளவு கஷ்டம் மழைக்காலம் என்றால்.

 மழை தவிர்க்க முடியாத , தவிர்க்க பட கூடாத ஒன்றுதான். ஆனா இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது. மழைக்காலத்துல வேளச்சேரி,தரமணி பக்கம் போயிட்டு வாங்க.என்ன கொடுமை சார் ன்னு உங்க தலையில நீங்களே அடிச்சுகுவீங்க...அங்க இருக்குற குழந்தைகள் rain rain go away -ன்னு பாடின சரின்னுதான் தோணுது.


நான் நாத்திகன் ஏன்? - பகுத்தறிவாளன் பகத்சிங்


பகத்சிங் ஒரு மாவீரன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த பகுத்தறிவாளன் என்பதை பகத்சிங் சிறை வாசத்தின் போது எழுதி தந்தையிடம் அனுப்பி வைத்த பகுத்தறிவு சிந்தனைகளை தமிழில் ப.ஜீவானந்தம் என்பவர் மொழிபெயர்த்த 'நான் நாத்திகன் ஏன்? என்ற புத்தகத்தை படிக்கும் பொது உணரமுடியும்.

இன்று கூட கடவுள் மறுப்புக் கொள்கைகளை பேசுபவர்களை அகங்காரம் பிடித்தவன். தற்பெருமைக்காக நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். இதை உணர்ந்த பகத்சிங் கடவுளை மறுக்கும் காரணங்களை விவாதிக்கும் முன்னர் தனக்கு அகங்காரமோ, தற்பெருமையோ இல்லை என்கிற நிலையை அழகாய் விளக்குகிறார்.

"என்னுடய பாட்டனார் தீவிரமான ஆத்திகவாதி. என்னுடைய தந்தை சுதந்திர கருத்துக்களை தீவிரமாக பேசினாலும் கடவுளை முழுதாய் நம்புபவர். எனக்கும் மதம்,சம்ப்ரதாயங்கள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுள் ஒருவர் இருப்பதை நம்பினேன்.

இப்படி ஒரு ஆத்திகவாதி அகங்காரம் காரணமாக கடவுள் நம்பிக்கையை விட முடியுமா?

அப்படி மறுத்தால் அதற்க்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

1. கடவுளை பரம விரோதியாய் எண்ண வேண்டும். இல்லையென்றால்

2 தானே கடவுள் என்று எண்ண வேண்டும்.

இந்த இரு கருத்துக்களையும் உடையவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது.முதலாவது கடவுளை விரோதியாய் பார்ப்பவன் கடவுள் ஒருவன் இருபதாய் நம்புகிறான். இரண்டாவது - தான் கடவுள் என்று சொல்லுவதால் மனிதர்களை மீறிய ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குவதாக நம்ப வேண்டும். ஆதலால் இவர்கள் இருவருமே நாத்திகர்கள் இல்லை.

நான் இவர்கள் இருவரையும் சார்ந்தவன் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதையே அடியோடு மறுப்பவன்.

மறுப்பதற்கு காரணம்?:

"நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்த பொழுது, இயக்கத்தில் இருந்த பலர் நாத்திக கருத்துக்களை உடையவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஆயுள் கைதியாய் சிறைவாசம் இருந்த பொழுது ஜெபிக்க எழுந்த ஆர்வத்தை அவர்களால் அடக்க முடியவில்லை. இயக்கத்தின் முழுப்பொறுப்பும் என்னிடம். அதுவரை வெறும் புரட்சிக்காரனாய் இருந்த நான் மார்க்கசின் பொதுவுடைமை நூல்களை கற்றேன். ஏகாதிபத்திய இருளை நீக்கிய லெனின்,ட்ராஸ்கி ஆகியோரின் நூல்கள்ளையும் கற்றேன். குறிப்பாக அராஜக தலைவன் பக்குனின் "கடவுளம் ராஜ்யமும்" நூலையும் , நிர்லம்ப் சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு நூலையும் கற்றதில் கடவுள் இல்லை என்பதில் தெளிவு கொண்டேன். "ஆராய்ச்சித்திறனும் சுயமாக யோசிக்கும் திறனும் புரட்சியாளனின் இரு கண்கள்"- என்கிறார் பகத்சிங்.

கடவுள் உருவான விதம் பகத்சிங் பார்வையில் -

"உலகம் ஏன், எங்கிருந்து உருவானது? உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிக்கான காரணம் என பல கேள்விகளுக்கு முன்னோர்கள் காரணம் கண்டுபிடிக்க முற்படும்போது சரியான தெளிவு கிடைக்காதால் கடவுள் என்று உருவாக்கப்பட்டு வேதாந்த தத்துவங்கள் உருவாகபட்டன. இது முன்னோர் ஓவ்வொருவரின் சொந்த கருத்துக்கள் என்பதால்தான் மதத்துக்கு மதம் கருத்தக்களில் பல முரண்பாடுகள் இருக்கிறது."

ஆத்திகவாதிகளிடம் பல கேள்விகளை எறிகிறார் பகத்சிங்.

ஆத்திகவாதிகளே,

நீங்கள் நம்புவதுபோல் சர்வவல்லமை படைத்த கடவுள்தான் இந்த உலகை படைத்தார் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களும், கஷ்டங்களும் நிறைந்த உலகை படைத்தார்? பூரணமாக திருப்தி அடைந்த ஜீவன் ஒன்று கூட இல்லையே ஏன்?

இதை நீங்கள் கடவுள் சித்தம்- ஈசன் இட்ட கட்டளை என்றால் "சட்டத்துக்குள் அடங்குபவன் சர்வசக்தி படைத்தவன் அல்லன்? அவனும் அடிமையாகதனே இருக்க முடியும்?

இதை நீங்கள் கடவுளின் பொழுதுபோக்கு,திருவிளையாடல் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள். பொழுதுபோக்குக்காக ரோமாபுரியை எரித்து மக்களை துன்பங்களுக்கு ஆளாக்கிய நீரோவுக்கு இவ்வுலகம் சூட்டிய பெயர் கொடுங்கோலன், கேடுகெட்டவன். அப்படியானால் உங்கள் கடவுள் கொடுங்கோலனா?

இறந்த பிறகு மோட்சத்தை அடைய இப்பொழுது உங்கள் கடவுள் பரிசோதிக்கிறாரா? பிற்பாடு மிருதுவான பஞ்சால் காயத்தை ஆறவைக்க இப்பொழுது காயத்தை ஏற்படுத்துகிறேன் என்ற வாதத்தை ஒத்துகொள்வீர்களா?

முஸ்லிம்,கிறிஸ்துவர்களை நோக்கியும் கேள்வி கேட்கிறார்,

முகமதியர்களே-கிறிஸ்துவர்களே,

உங்களுக்கு முற்பிறப்பு-பூர்வ ஜென்மம் பற்றி நம்பிக்கை இல்லை. சர்வ வல்லமை படைத்த உங்கள் கடவுள் இந்த உலகத்தை படைக்க ஏழுநாட்கள் எடுத்துகொண்டது ஏன்? தினமும் நன்றாய் இருக்கிறது என்று ஏன் கூறினான்?

இன்று அவனை கூப்பிடுங்கள். "எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்லும் தைரியம் இருகிறதா பாப்போம்"?

தண்டனை மூன்று வகை "பழிக்குப்பழி,பயங்காட்டுதல்,சீர்திருத்துதல்"
இந்த மூன்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சீர்திருத்துதலையே முன்வைகின்றனர்.

அப்படியிருக்க முன்ஜென்ம வினைக்காக மக்களை துன்பபடுதுதல் சரியா?

தண்டனையாக மாடாக,பூனையாக,நாயாக 84 லட்சம் இருபதாக சொல்கிறீர்கள். இதனால் அடையும் சீர்திருத்தம் எனன? முன்ஜென்ம ஞாபகம் கொண்டவர்கள் யாரேனும் உண்டா?

தனது பொழுதுபோக்கிற்காக மக்களை கொன்று குவிக்கும் செங்கிஸ்கான் போல்தான் கடவுள் என்றால் வீழ்த்துங்கள் அவனை!" என்று கர்ஜிக்கிரான் இந்த சிங்கம்.

சரி உலகத்தை படைத்தவன் கடவுள் இல்லை? மனிதனை படைத்தவன் கடவுள் இல்லை?பிறகு யார்தான் இதற்கெல்லாம் மூலம் என்கிற கேள்வி எழும். இதற்க்கு பதில் பகத்சிங் நடையில்,

"இந்த விசயத்தில் தெளிவு கொள்வதற்கு சார்லஸ் டார்வின் எழுதிய "orgin of species " நூலை படியுங்கள். பல்வேறுபட்ட பொருட்கள் தற்செயலாக கலந்து உருவானதில் பிறந்தது இவ்வுலகம். பூர்வ ஜென்ம பலன் ஏதும் இல்லை - அதற்கு நம் ஜீன் தான் காரணம் என்று வல்லுனர்கள் சொல்லிவிட்டனர்.

கடவுள் ஒன்று இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்?

பதில்- சில பித்தலாட்டக்காரர்கள் மக்களை அடிமையாகி வைத்துகொள்ள கடவுளை உருவாகி பிரசாரம் செய்தனர். மக்கள் எப்படி பேய்,பிசாசு என்பதை நம்பினார்களோ அதே போல்தான் கடவுளையும் நம்பினார்கள். மனிதனுக்கும் தன்னுடைய கஷ்ட காலங்களில் தன உறவுகளையும் தாண்டி ஒன்றை நாட மனம் எத்தனித்தது. இது மிருக நிலையில் சரி. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறி பகுத்தறிவுடன் அதை உடைத்தெரியாமல் போனது துயரம்."

முடிவுரையாக, "கஷ்ட காலத்திலும் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரை பற்றி படித்திருக்கிறேன். நானும் என்னுடைய முடிவுரையில், தூக்கு மேடையில்கூட ஆண்மையுள்ள மனிதனை போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து வருகிறேன்". - என்று முடித்திருந்தான் அந்த பகுத்தறிவாளன்-நாத்திகன்-மாவீரன் பகத்சிங்.