LAS GRUTAS DE TOLANTONGO - வெந்நீர் பாலைவனச் சோலை


"விழித்துக்கிடக்கும்
ஆற்றை குலாவிக்கிடக்கும் 
முழு நிலவை
இம்மாமலையின் 
அடியில் மறந்துவிட்டு 
எப்போது நான் துயில்வேன்?"
 30 வருடங்களுக்கு பிறகு முழுநிலவு நாளில் அமைந்துவிட்ட அற்புதமான கிறிஸ்துமஸ் திருநாள். கொண்டாட்டத்தின் ஓட்டத்தில் போய்  சேர்ந்த இடம்  Grutas Tolantongo. சுமார் 5200 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதி, இங்கே ஓடும் ஆறுக்கும் அதே பெயர்தான்  Tolantongo. இங்குள்ள மலை பகுதிகளில்  நீண்டு மரம்போல் வளர்ந்த கள்ளி செடிகளும் கருவேல மரங்களும் தாது மண் பாறைகளும் சேர்ந்து பார்ப்பதற்கு பாதி பாலைவனம் போல்தான் காட்சி தருகிறது. அருவிகளில் கொட்டும் தண்ணீர் இளஞ்சூடாக விழுகிறது, எரிமலைகளில் இருந்து அருவி உருவாகுவது காரணமாய் இருக்கலாம்.

Tolantongo 

இந்த இடம் அரசாங்கத்துக்கோ தனியாருக்கோ சொந்தமான பகுதி இல்லை என்பது ஆச்சர்யம். Ejido என்ற சமுகத்திற்கு சொந்தமான இடம், ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னால் 112 குடும்பங்கள் சேர்ந்த இந்த சமூகத்தினர், அரசிடமோ அல்லது தனியாரிடோமோ எந்தவித உதவியும் பெறாமல் வேலையே தொடங்கி கேளிக்கை இடமாகவும் சுத்தமாகவும் போக்குவரத்து வசதி அமைப்பதிலும்  பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  Ejido சமூகத்தினர் இரண்டு பிரிவுகளாக இந்த பகுதியை பிரித்து மேலாண்மை செய்து வருவதாக கூறுகின்றனர்.

மலையிலிருந்து 2 குகைகளுக்குள் அருவி விழுந்து செல்வதை உள்ளே சென்று பார்ப்பதற்கு வசதிகளும், ஓடும் சூடான நீரை வட்ட வட்ட நீச்சல் குளமாக பெருக வழிந்தோடி ஆற்றில் கலக்க விட்டு கலக்கி இருக்கிறார்கள். குகைகளின் உள்ளே விழும் நீர் சற்று சூடு அதிகமாகவே இருக்கிறது.இரவு ஆற்றின் ஓரத்திலே  கூடாரம் அமைத்து தங்கி உண்டு உறங்கி அற்புதமான தருணங்கள், கூடவே முழு நிலவு வெளிச்சம் சொர்க்கம்.

முழு நிலவு என்றுமே சிறப்பு, அத்துடன் இந்த இடமும் ஆற்றில் நீர் ஓடும் சத்தமும் இரவின் ஆழமும் நீண்டுகொண்டே செல்கிறது மனதில்.. 



0 Comments:

Post a Comment