என் அம்மாவுக்கு


என் எண்ணமெல்லாம் சிரிக்கும் அம்மா !
உன் புன்னகையால் நாட்கள் நகருதம்மா!

முன்னெல்லாம் உன் சமயல் சலிச்சதம்மா
இப்போ சென்னையில பஸ் ஏற
       மனம் முன்னாலே பறக்குதம்மா!
பட்ட கஷ்டமெல்லாம் போதும்
         கொஞ்சம் கால் அமர இருந்துக்கம்மா!
நீ இஷ்டபட்ட பொருளுக்கெல்லாம் EMI - யோட
     உன் மகன் இருக்கேன் கொஞ்சம் சிரிசுக்கம்மா!

கலகொட்டு தூக்கி கோணகொல்லை
            நேரான கதை போதுமமம்மா -
அப்பாவுக்கும் சேர்த்து உலையில் அரிசிபோட்டு
       வீட்டிலேயே பாய்விரிச்சு படுத்துக்கோம்மா!

பெத்த புள்ளைக்காக அழுததெல்லாம் அன்னுவத்தி
           குளம்  போல அப்படியே போகட்டும்மா -
உன் பிள்ளை ரெண்டு பெரும் உனக்காக
          பணத்தை ஆளுக்கொரு திசையில விரட்டுதம்மா!

நான் ஊர் திரும்பும் போதெல்லாம் கொழம்பில்
      கொதிக்கும் கறியில் உன் பாசம் தெரியும்மம்மா-
நீ கூப்பிட்ட ஓடி வரும்  கோழிக்கெல்லாம்
    நான் ஊருக்கு வரும் சேதி தெரியுமாம்மா??!!

நீ கண்ட கனவெல்லாம்
       ஜெயிச்சதான்னு தெரியலம்மா ??
உன் புள்ளைக ஜெயிச்சதுன்ன - காரணம்
        நீயின்னு ஊருக்கே தெரியுதம்மா!!

நீ வெந்தயம் மட்டுமே போட்டு வச்ச
  கொழம்பில் முட்டை வாசம் அடிக்குதம்மா!
நாங்க முட்டை கொழம்பே வச்சாலும்
    மூக்கு சொரணயத்து கெடக்குதம்மா!

ஊரனுப்பி வச்சுப்புட்டு
    எப்படிம்மா நீ இருந்த? - இங்கே
பழைய சோறு கெடைக்காம
    பால்வயிறு பத்திக்கிட்டு எரியுதம்மா!

போனில் மூச்சு காத்து இரைச்சல் வச்சே
   கண்டுக்குவேன் ஆத்தாவுக்கு முடியலன்னு!
நீ தெம்பெல்லாம் ஒன்னு சேர்த்து
     ஒம்பாமா பொய் சொல்லுறியே
அப்பாவையும் கூட சேர்த்துகிட்டு!

எங்கயாச்சும் ஒரு கெழவி தவமணி
   மகனான்னு கன்னந்த்தடவயில
உன்னைபத்தி புரியுதம்மா!! - நீ
  ஒருத்தரையும் விட்டதில்ல
உன் பாசம் தெரியுதம்மா!!

நான் பரிச்சையில மார்க் கொறச்சு எடுத்த
     'அன்னைக்கே கத்துச்சு' ன்னு பழி பல்லி மேலே!
இன்னைக்கும் எதாவது தப்பு செஞ்ச - மனசு
    பல்லியையும் உன்னையும் தேடுதம்மா!

உடஞ்ச மண்சட்டியெல்லாம் கணக்கெடுத்த
      உன்துயரம் ஓரளவு அளந்திடலாம்! - நான்
வண்டியிலே வரும்முன்னே நீ நடந்தே
    சுமை தூக்கி பார்கையில உன் பாசத்தை
 என கோபம் மறைச்சுடுதம்மா!

ஊரில் நான் இருக்கும் ரெண்டு நாளில்
    ரெண்டு தடவ முட்டை கொழம்பு
    மூணு வேல கறிக்கொழம்பு
    கடைசி வேல சாப்பிட்டு
   கைகழுவி  திரும்பையில
  'நாளைக்கு காலையில என்ன சாப்டுவ??"
  என்று நீ கேட்க்கும் ஒரு நொடியில்
  உன் பாசம் நிகழ்காலத்தையே
        ஒரு நாள் தண்டுதம்மா!!!!
என மனமோ மடத்தனமாய் காலத்தை
      ஒருநாள் பின்னால் இழுக்க நினைகுதம்மா!!

நீ அடுப்பு ஊத்தி ஊதியே
    பெரிதாக்கி  விட்டாயம்மா -
உன் பிள்ளைகளையும்
உனக்குள்ள ஒருத்தலைவலியையும்!

நீ எப்பொழுது பேசினாலும்
   அலைபேசியில் எனக்கு கேட்கிறது
பதிவு செய்யப்பட்ட வரி போல ஒன்று
"நான் நல்ல இருக்கேன் - நீ நல்ல இருக்கியா?"
மாறவே இல்லையேம்மா??? -  சண்முகா
கிளினிக்கில் நான்காவது குளுகோசில்
கொஞ்சம் தேம்பேறி பேசிய போதும்!

"உங்கம்மா வெள்ளந்திடா -
   போதறவா பாத்துக்கணும்!"
பக்கத்துக்கு வீட்டு பெரியாயி கெழவி
  பொகயிலையோடு சேர்த்து
         போதனைய துப்பும்!

" அடேய் படவா !
ஆத்தாவ கடைசி காலத்துல
கண்ணீர் சிந்தாம பாத்துக்கணும்"
சண்முகம் தாத்தா சாக்லேட் கையோட
 கண்ணை உருட்டி சொல்லுவாரு!

" உங்கம்மா வயிறேருஞ்சு
வார்த்தை சொன்ன - நீங்களெல்லாம்
 நல்லாவே இருக்க முடியாதுடா"
பக்கத்துக்கு வீட்டு சித்தி
 அடிக்கடி பயமுறுத்தும்!

எது எப்படியோ அம்மா...
அழுது அழுது படிக்கவச்ச
ஆத்தாவுக்கும் அப்பனுக்கும்
முகத்தில் சிரிப்பை கூட
கொடுக்கலன்ன நானெல்லாம்
 நான் மகனா பிறேன்தென்ன லாபம்!
மனுஷ பிறப்புக்கே அதுதான் சாபம்!

அவுக சொன்னதெல்லாம்
நெஞ்சுக்குள்ளே குடியிருக்க
உம்பாசம் ஊன் உயிரா
நெறஞ்சிருக்க - ஒரு நாள்
அம்மையில நான் படுத்தேன்!
ஆத்தா நீ வேண்டிக்கின
" மாரியாத்தா என்ன எதுவேணாலும்
 பண்ணிக்க எம்புள்ளைகள விட்ட்ருன்னு'
வாய்விட்டு அழ வரல எனக்கு
நாக்குலயும்  அம்மை!
கண்ணு மட்டும் கலங்குது உன்ன பார்த்து!
கண்ண தொடச்சுகிட்டே நீ கேட்ட
" ரெம்ப வலிக்குதய்யான்னு' - பிறகு
வலி வந்தாலும் கண்ணீர் விடலயம்மா
சாமிக்கே என்னால சாபம் விழுகுதுன்னு!
சேர்த்து வச்ச கண்ணீரு சர சரன்னு
போகுதம்மா மூட்ட போட்டாலும் 
 பொத்துக்கிரும் மடயைப்போல!
ரெண்டு நாள் கழிச்சு நீயும்
அம்மையில படுக்கும் போது !

பொதுவாவே அம்மா பிள்ளை
  பாசத்துக்கு நிகரே இல்ல !  -
400 மைல் தாண்டி நான் திரும்பி
நின்னு பார்த்த கிடு கிடுன்னு
ஏறுதம்மா தங்க விலையைப்போல!

நீ உனக்காக என்றும்
   அழுததே இல்லையம்மா! -
இனியும் உன்னை
   அழுக விடவதில்லையம்மா!
எப்பவுமே நீ எங்களோட
    கண்ணாடிதாம்மா ! - நாங்க
சிரிச்ச நீ சிரிப்பா
  எங்க முன்னோடி நீயம்மா!
தவம் இருந்து பெற்றதால தாத்தா
   வச்சபெயர் தவமணிம்மா!
நான் என்ன  செய்தேன்
  உன் மகனாய் பிறக்க ?? -
முன்ஜென்ம கனவொன்றில்
விடை கண்டு தெளிந்தேன்!
"அப்போதும் நான் உன்மகன்தாம்மா"!!


****

நேரம் கிடைக்கும் போதெல்லாம்
கடவுளிடம்
வேண்டிகொள்கிறேன்..

வேலைக்கு போகதே!
கறி எடுத்து சாப்புடு!
அப்பாவ பாத்துக்கோ !
உடம்புக்கு சுகமில்லையென்றால்
அரசு வேண்டாம்
தனியார் சென்று பார்த்து வா!
என வேண்டுதல்கள்
அடுக்கி கொண்டே செல்கிறேன்!

வரமாய்
நீண்ட சிரிபொலி மட்டுமே
கிடைக்கிறது அலைபேசியில்...!0 Comments:

Post a Comment