நண்பேன்டா...!! நட்புடா..!!

நட்பும் மப்பும் ஒன்றேயடா- ரெண்டும் 
       துட்டின் மதிப்பு அறியாதடா!
கற்பில் கூட களங்கமடா - அது 
      காசுக்காக ஒதுங்குதடா! - நட்பு 
 வெட்டி எடுக்கும் வைரமடா - அதை 
         வெட்டும் உரிமை உன்னதடா !

பணக்கட்டில் அடங்க பழக்கமடா ! 
      மனக்கட்டில் அடங்கா கடவுளடா!
 நிழல் போல் ஒட்டி வளரும் சொந்தமடா -
     நிலையாய் தட்டி கொடுக்கும் நட்பேயடா!

மொத்த உலகமும் நட்பில் அடங்குதடா ! - 
        மொத்தமாய் பார்த்தல் நட்பே உலகமடா!




சுபம்

பிடித்ததை தேர்ந்தெடுக்க
     பிறப்பு என்பது பொருட்க்காட்சியல்ல!
நினைத்ததை எல்லாம் முடித்துகாட்ட
    இங்கு ஒன்றும் உன் ஆட்சியல்ல!

விட்டதை பிடிக்கும் நோக்கில்
      விட்டத்தை நோக்கி இருந்தால்
கட்டி இருக்கும் கோவணமும்
     ஒருவேளை களவாடபடலாம்!

கெட்டதை புறந்தள்ளி
       கிட்டியதை கையில் அள்ளி
 கட்டு உன் ராஜ்யத்தை - நல்லவர்
           நால்வரால் உறவாடபடலாம்!
  
மனதில் பட்டதை உரக்கச்சொல்லி
       உள் எண்ணங்களை விளக்கிச்சொல்லி
 திண்ணிய நெஞ்சம் கொண்டு நட
       நீ மலர்களுக்கே அழகு சேர்க்கலாம்!

கால மாற்றதினால்
      காட்சிகள் மாறினாலும்
 மனசாட்சியோடு நீ
         தினம் ஒத்து வாழ்ந்தால்
 படக்காட்சி போல - உன்
        வாழ்க்கை 'சுபம்' போட்டு முடியும்!




கல்லூரி கடைசி நாளில்..!




"எங்க மச்சி போய்டபோறோம்"- என்று
நண்பனின் தோளைதட்டி 
ஆறுதல் சொன்னாலும் -
கையை எடுக்காமலே 
நிற்கிறேன் எங்கே 
இதுதான் கடைசி 
பிடியாய் இருக்குமோ 
என்ற பயத்தில்!

பேசியே தினமும்
 எங்களை கொல்லும்
 எங்க பய மொக்க!
 பேசாமல் எங்களை
 கொல்கிறான்  மௌனம்
 என்னும் ஆயுதத்தால்!

பரம எதிரிகளாய்
பார்க்கபட்ட ஆசிரியர்கள் 
எல்லாம் பாதிரியார்களாய் 
தெரிகிறார்கள் - என்னுள்
நான் பாவியாய் 
உணரப்பட்ட தருணத்தில்!

கல்லூரி நாட்களில்
ஆர்பரிக்கும் அலையாய்
நண்பர்களின் அரவணைப்பில் 
கரையேறிய நான்!
கடைசி நாளில்
தனி தீவில் 
விடப்பட்டதாய் உணர்ந்தேன்
தோளோடு இருந்த 
என் தோழனின் கைகள் உயர்ந்து பை
சொன்னபோது!  

கல்லூரி
கடைசி நாளை
நினைக்கும்போதெல்லாம் 
ஒரு கணம் வலிக்கிறது!
"இருக்காத பின்னே"
நண்பர்கள் பக்கமிருந்தும்
சிரிக்க மறந்த நாள் அல்லவா!

கல்லூரி நாட்களின்
சுக துக்கங்கள் 
எல்லாம் கடைசியாய்
எடுக்கப்பட்ட 
புகைபடத்தில் 
ஒளிக்கபட்டிருகிறது!
ஒவ்வொரு முறையும்
என் கண்ணீர்
அதை கண்டுபிடித்துவிடுகிறது!  

என் ஆட்டோகிராப்
நோட்டை என்றும்
 சாய்த்து வைத்ததில்லை!
 நண்பர்களின்
 கண்ணீர் துளிகள்
 சிந்திவிடும் என்பதற்காக!

நானும் 
மண்ணாசை பிடித்தவன்தான்
இப்போது உணர்கிறேன்!
அந்த 
கல்லூரி வகுப்பறையில்
எனக்கும் 
ஒரு பங்கு உண்டு !

இன்றும் 
கல்லூரி சம்பந்தப்பட்ட
படங்களை பார்க்கும்போது
நமது கல்லூரி நாட்களும் 
படமாய் பதிவு செய்திருந்தால்
நன்றாய் இருந்திருக்குமே
என்று மடத்தனமாய்
மனம் கவலைகொள்கிறது!