மழைக்கவிதை


பெரும்போருக்கான
ஆயத்தம் தெரிகிறது
வானில் - எதையோ
செய்துவிடப்போகும்
ஆவேசமும்
கொந்தளிப்புமாக
அலைகிறது காற்று!
பெரும் சத்தத்துடன்
வானம் பொருமிக்கொண்டிருக்க
படிகள் தடதடக்க
ஓடிவந்த கீழ்வீட்டுப்பெண்
கொடியில் பாதித்துணி
எடுக்கயில் தொடங்கியது
இன்றைக்கான புதுமழை!

***
கொட்டித்தீர்த்த
மழையில்
வகையாய்
மாட்டிக்கொண்டேன்!
ஊடலின் பின்
சேர்ந்த காதலிபோல்
முத்த மழையால்
நனைத்துவிட்டது!

**
 மாநகர பெருமழை
ஒரு வகையில்
வசீகரமானது - குளித்து
துவட்டாமல் கடக்கும்
குமரியைப்போல்!

விழுந்த நீர் போக்கு
இடமில்லாமல் தேங்குவது
நெருடலானது - அதீத
ஒப்பனை வியர்வையில்
பல்லிளிப்பதைப்போல!

**
மழையே!
சென்னையில் வந்து
ஏன் பொழிந்தாய்!
இங்கே நீ
மண்ணுக்கோ
மனிதனுக்கோ
உதவப்போவதேயில்லை!

இங்குள்ள
சிமெண்ட்டயும்
தாரையும் மீறி
என்னதான்
செய்துவிட முடியும்!

சடசடவென பொழிந்து
சாக்கடையில் சங்கமிக்கலாம்!
குழியெல்லாம் நிரம்பி
பைக் ஓட்டிகளுக்கு
கிலி உண்டாக்கலாம்!
காரணம் தேடும் குடிமகன்கள்
குளு குளு கிளைமேட்டில்
சியர்ஸ் அடிக்கலாம்!

இதுதான்
சமயமென்று
கவிதையென்று ஏதாவது
இதுபோல கிறுக்கி
கடுப்பேத்தலாம்!
**
காலை நேர
மாநகர பெருமழை
எப்போதும்
எனக்காக விட்டு செல்வது
வேலை நேர தாமதத்தையும்
ஊர்புற நினைவுகளையும்
மற்றுமொன்றையும்தான்

**
பெருநகர மழையால்
ஒரு பயன் உண்டு!
வேலையத்தவர்களை
கவிஞர்களாக்குகிறது!

**


0 Comments:

Post a Comment