10 நிமிட தாமதம்

ஐந்து ருபாய் சில்லறைக்காக
நடத்துனரின் அர்ச்சனையோடு
அடுத்த ஸ்டாப்பில்
இறங்கி நிற்கிறேன்
கையில் காந்தி நோட்டோடு
காந்தி ரோட்டில்!

முகம் இறுகி கண்கள் சிவந்து
அடுத்த பஸ் பார்த்து நிற்க
பின்புறம் எதோ
பாவனையில் கை அசைய
திரும்பிப்பர்கிறேன் ! -

ஐந்து நொடியில்
ஐந்து வருடங்களை
மனம் அலசி பார்க்கிறது !
நினைவு குதிரையில்
யாரோ ஒருத்தி
பயணம் செய்கிறாள் !

ஒடிசலான உருவம்
ஒல்லியான கன்னம்
வெட்டி நடக்கும் நடை!
பிடிபட்டது பேதை
அவள்தான் இவள் !

உப்பிய கன்னம்
சற்றே பெருத்த உடல்
புடவையில் அவள்
புடவையின் நுனியை
பிடித்தவாறு அவள் மகள் !

அசட்டு சிரிப்புடன்
அவளை அடைகிறேன்!
சிறிய இடைவெளியில்
நலம் விசாரிப்புகள் !
அளந்த வார்த்தைகள்
வார்த்தையின் நடுநடுவே
செயற்கையாய் சிரிப்புகள்!

இங்கிதமறியா  பேருந்தொன்று
அவள் பயணத்தை நீட்டி சென்றது!

எனக்கான பேருந்தின்
பத்து  நிமிட இடைவெளி
பல வருட நினைவுகளை
வாரி இரைக்கிறது ! -

பேருந்து இரைச்சலில்
மன பிம்பங்கள் அகல
ஜன்னலோர இருக்கையில்
சாய்ந்து கிடக்கிறேன்-

மனதில் மாறி மாறி ஒலிக்கிறது!
அவளின் அன்றய குழந்தை சிரிப்பும்
இன்றைய அவள் குழந்தையின் சிரிப்பும்!