ஓலம்


பேரிரைச்சலுடன் பெய்த 
அப்பெருமழை அதிர்ச்சியாயிருந்தது.
அந்த ஒலம் என்னை
அலக்கழித்துக் கொண்டேயிருந்தது.
நீண்ட நேரம் கழித்து
நான் தூங்கிப் போனேன். 
விழுந்த மழைத்துளி அதன்
பயணத்தை துவங்கியிருந்தது


என் சாவுக்கு யாரும் காரணமில்லை


நேற்றிரவு என் அறையில்
யாரோ ஒருவர் அழுதுகொண்டிருந்தார்
ஆறுதல் சொல்லலாமென்று எத்தனித்தேன்
உன்னிடமிருந்து ஆறுதல் தேவையில்லை
என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்
என் சொந்தங்களிடம் விசயத்தை
சொல்லி அழைத்து வருவதற்குள்
"என் சாவுக்கு யாரும் காரணமில்லை"-யென்று
கடிதமெழுதி வைத்துவிட்டு
தூக்கில் கேள்வியாய் தொங்கி கொண்டிருந்தார்.
திடுக்கிட்டு எழுந்ததில்
அக்கொடுங்கனவு கலைந்தது.
எப்போதும் போல அவர் சாவுக்கு
நான் காரணமாய் இருக்க முடியாது
என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு 
மீண்டும் தூங்கிப்போனேன். 
இப்போது என் கொல்லைப்புறத்தில்
மூன்றுபேர் தற்கொலை செய்துகொள்ள யாரோ
கைகளை பின்னால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


ஆறுதல்



என்னைச் சுற்றி
பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்கிறது
இவ்வுலகம்
இயல்பான மனம்
கொண்டயெனக்கு
பதட்டமாயிருக்கிறது.
எங்கோ தொலைந்துவிட்ட
குழந்தைபோல்
அழத்துடிக்கிறேன்
ஆறுதலுக்கோர் வார்த்தையில்லை
என்றுணர்ந்து
எதையோதேடி
கூட்டத்தோடு கூட்டமாய்
நானும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடம் எதாவது
வார்த்தை மிச்சமிருந்தால்
சொல்லுங்கள்
கொஞ்சம்
இளைப்பாறிக்கொள்கிறேன்.


தனிமை



யாரோ
யாரோயோதான்
தேடிக்கொண்டு வருகிறார்
இருந்துவிட்டு
போகட்டுமே
அவ்வழைப்பை
எனக்கானதாய்
நினைத்துக் கொள்கிறேன்.
இக்கொடுந்தனிமைக்கு
ஆறுதலாய்
இருந்துவிட்டு போகட்டும்! 


நீண்ட நாள் கழித்து

நீண்ட நாள் கழித்து
ஏழுகடல்
நூறு மலை தாண்டி
வந்திருந்தாள் எனைக்காண!
வெண்படல விழிசுருங்க
உதட்டில் ஒரு சுழியெடுத்து
முறைத்து - நொடியெடுத்து
சிரித்தாள் ஏதேதோ கதைத்தாள்.
நானோ அவள் முகத்தையே பார்த்திருந்தேன்
முற்றாய் உதட்டசைவிலே லயித்திருந்தேன்.
கள்ளிமுகம் சற்றும் மாறவில்லை
கண்டிப்புகள் சற்றும் குறையவில்லை.
நெடுங்காலமாய் அவளைத்தவிர
காட்சிகளை மட்டும்தான் 
மாற்றிக்கொண்டிருக்கிறேன் அல்லது 
மாறிக்கொண்டிருக்கின்றன கனவில்.
நல்ல தூக்கம் போலிருக்கிறது
நீண்ட நாள் கழித்து.